Temple History

இயற்க்கை எழில் கொஞ்சும் குமரி மாவட்டத்தின் தென்கோடி முனையில் அரபிக் கடல் முத்தமிட்டு செல்லும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வள்ளவிளை என்ற ஊரில் அமைந்திருக்கும் இத்திருக்கோவில் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றாகும்.

நூற்றாண்டுகளுக்கு முன் தானிமூடு என்ற இடத்தில் கயர் தொழிலாளி ஒருவர் வாழ்ந்து வந்தார் அவர் தன் தினசரி வேலையை முடித்துவிட்டு பக்கத்திலுள்ள ஆற்றில் குளிப்பது வழக்கம். ஒரு நாள் அவர் குளித்துவிட்டு மேற்கு திசை நோக்கி தொழுதுகொண்டு நின்ற நேரம் பக்கத்திலுள்ள கள்ளிச்செடியின் அருகிலிருந்து ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தார் அவ்விடத்தில் யாரையும் காணவில்லை. மீண்டும் குழந்தை அழும் சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்த அவர் முன் சிவப்புப் பட்டுடுத்து குறத்தி வடிவில் பெண்மணி ஒருவர் தோன்றினார். அப்பெண்மணியை பார்த்து அம்மா நீ யார் உனக்கு என்ன வேண்டும், குழந்தை அழும் சத்தம் கேட்டதே எங்கே உன் குழந்தை என்று அந்த பெண்மணியிடம் கேட்டார். அப்பெண்மணி, நான் கிழக்காம் தலத்திலிருந்து வருகிறேன் நான் யாரென்று நீ தானாக அறிவாய் என்று கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து மறைந்தார். திடீரென மறைந்த அப்பெண்மணி யாரென குழம்பி அதிர்ச்சியடைந்தார். தனது வீட்டில் திரும்பிய சற்று நேரத்தில் அவருக்கு காய்ச்சல் வந்து படுத்துவிட்டார் அன்றிரவு தொழிலாளியின் கனவில் இசக்கி அம்மன் தோன்றி, மகனே நீ தொழுது கொண்டிருந்தபோது கள்ளிச்செடியருகில் குறத்தி வடிவில் குழந்தை அழும் சத்தம் தந்து தோன்றியது நான் தான், என்னை வழிபட்டால் ஊரிலுள்ள மக்கள் அனைவரையும் நோய்நொடி நீக்கிக் காத்துக்கொள்வேன் என்று அருள் வாக்குகூறி கனவிலிருந்து மறைந்தார் இசக்கி அம்மன். சற்று நேரத்தில் காய்ச்சலிலிருந்து குணமடைந்த அந்த தொழிலாளி மறுநாள் வேலைக்குச் சென்றபோது தானிமூட்டில் ஒற்றைப் பனைமரத்தின் முன் இதுவரையிலும் காணாத ஒரு கல்லின் மேல் சிவப்பு பட்டு ஒன்று மூடியிருந்ததை கண்டார். அன்றிலிருந்து அந்தக் கல்லை இசக்கி அம்மன் உருவம் என நினைத்து தினமும் விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தார். பின்னர் இதை அறிந்தவர்களும் வழிபட ஆரம்பித்தபோது ஊரிலுள்ள பெரியோர்கள் ஒன்று கூடி அம்மனுக்கு கோவில் கட்டி வழிபட தீர்மானித்தார்கள்.

அதன் அடிப்படையில் வள்ளவிளை அரையர் சமுதாயத்திற்க்கு சொந்தமான இடத்தில் அம்மனுக்கு ஓலையால் சிறிய கோவில் கட்டி வழிபட்டு வந்தனர். வருடத்திருவிழா நாட்களில் மேளதாளங்களுடன் ஊர்வலமாய் அம்மன் உருவான தானிமூட்டில் சென்று பூஜைகள் செய்து அம்மன் அனுமதி பெற்ற பிறகு தான் வள்ளவிளையில் திருவிழாவினை மிகச்சிறப்பாக நடத்தி வந்தார்கள். பின்னர் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஓலையிலினான கோவிலை மாற்றி புதிய கோவில் ஒன்றை கட்டி திருவிழா நடத்தி வந்தனர். ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றி இரண்டாம் ஆண்டு நடந்த கோவில் திருவிழாவின் தொடர்ச்சியான எட்டாம் கொடை விழாவின் போது பரண் அமைக்க மண்ணில் தோண்டிய குழியிலிருந்து பழங்காலத்து சூலாயுதம் மற்றும் விளக்கு தென்பட்ட காரணத்தினால் நடத்திய தேவப்பிரஷ்னத்தின்போது இவ்விடத்தில் ஸ்ரீ ராஜராஜேஷ்வரி அம்மன் கோவில் ஒன்று இருந்ததாகவும் அக்காலத்தில் அரையர்கள் அக்கோவிலில் பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் நடத்தி அம்மனை வழிபட்டு வந்ததாகவும் , நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த இயற்க்கை பேரழிவின்போது அக்கோவில் மண்ணில் புதைந்து போனதாகவும் பல உண்மைகள் தெரிய வந்தது. அன்றிலிருந்து ஸ்ரீ ராஜராஜேஷ்வரி அம்மனையும் குடியிருத்தி காப்பு கட்டி பூஜைகள், மற்றும் திருவிழாக்கள் நடத்தப்படுகிறது இந்த இரண்டு அம்மனும் ஒரே தலத்தில் அருள் பாலிக்கின்ற காரணத்தினால் இக்கோவில் தற்பொழுது ஸ்ரீ ராஜராஜேஷ்வரி இசக்கி அம்மன் கோவில் என்ற பெயரில் வெண்ணிக்கமுடன் விளங்கி வருகிறது .

மேலும் இக்கோவில் வள்ளவிளை அம்மன் கோவில், தானிமூட்டம்மன் கோவில் என்ற பெயர்களிலும் பக்தர்களால் அழைக்கப்படுகின்றது. அம்மனுக்கு முடங்காமல் ஆண்டு தோறும் வில்லுப்பாட்டு, பூப்படை, மஞ்சள் நீராட்டு, எட்டாம் கொடை, மாதப்பொங்கல், என அனைத்தையும் மிகச் சிறப்பாக நடத்திவரும் ஒரே ஒரு கோவிலாகும். அனைத்து தரப்பினர்களும் வழிபட்டு அம்மனின் அருள்பெற்று செல்கின்றனர்.

Calendar Events